அகர்தலா,
திரிபுராவில் செபஹிஜாலா மாவட்டத்தில் நீர்மஹாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி பிப்லப் குமார் தேவ் கலந்து கொண்டார்.
அவர் பேசும்பொழுது, நீர்நிலைகளில் வாத்துகள் நீந்தும்பொழுது அவை நீரை மறுசுழற்சி செய்கிறது. நீரில் நீந்தும் வாத்துகளால் பிராண வாயு அளவு அதிகரிக்கிறது என கூறினார்.
அதனால் ருத்ரசாகர் ஏரி அருகே வசிக்கும் கிராமவாசிகளுக்கு 50 ஆயிரம் வாத்து குஞ்சுகளை விநியோகிக்க விரும்புகிறேன். இதனால் அவர்களுக்கு ஒரு மாற்று வருமானம் கிடைக்கும் என்றும் கூறினார்.
முறையாக வாத்து குஞ்சுகளை வளர்த்தோம் என்றால் ஆண்டுக்கு குறைந்தது ரூ.6 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி மற்றும் மருத்துவரான அசோக் சின்ஹா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதேபோன்று விலங்குகள் வள முன்னேற்ற துறை இணை இயக்குநர் சர்கார் மற்றும் விஞ்ஞானி மிஹிர் தாஸ் உள்ளிட்டோரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.