தேசிய செய்திகள்

ஜனாதிபதி உரையின்போது காவிரி பிரச்சினையை எழுப்பிய தி.மு.க. எம்.பி.க்கள்

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது நடந்த முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது நடந்த முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு வருமாறு:-

காவிரி பிரச்சினை

* ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற தொடங்கியதுமே தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் காவிரி பிரச்சினையை எழுப்பினர். காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்காததை கண்டித்து கோஷங்களை முழங்கினர். அவர்கள் கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியும் இருந்தனர். அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சமாதானம் செய்து, இருக்கைகளில் அமருமாறு கேட்டுக்கொண்டார்.

* முதலாவது ரபேல் போர் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேரப்போவது பற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியபோது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், பாரதீய ஜனதா எம்.பி.க்களும் புன்னகைத்தவாறு மேஜைகளை தட்டினர்.

கை குலுக்கிய ஜனாதிபதி

* ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி முடித்ததும் நேராக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்த முதல் வரிசையை நோக்கி சென்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைவருடனும் அவர் கை குலுக்கினார்.

* நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்து ஜனாதிபதி சென்றதும், தனது தாயார் சோனியாவுடன் அமர்ந்திருந்த ராகுல் காந்தியிடம் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சென்று உரையாடினர். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா, ராகுல் காந்தியை கட்டித்தழுவினார். ராகுல் காந்தி நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி அனைவரும் வாழ்த்தினர்.

சோனியாவும், ஸ்மிரிதியும்

* காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்து வெளியேறியபோது, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்திய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும் இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

* மாநிலங்களவை எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர்சிங்குடன் சோனியாவும், ராகுலும் உரையாடியதை பார்க்க முடிந்தது.

* மனிதவள மேம்பாடு துறையின் முன்னாள் ராஜாங்க மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், மனித வள மேம்பாடு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுடன் உரையாடியதையும் காண முடிந்தது.

* ஜனாதிபதி உரையின்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் செல்போன்களை பயன்படுத்திக்கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

* தேசிய பாதுகாப்பு நிதியத்தில் இருந்து, வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் குழந்தைகளுக்கு வழங்கும் கல்வித்தொகையை அதிகரித்திருப்பது பற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியபோது, சோனியா காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்