புதுடெல்லி
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 131 பேர் வரை பலியாகி உள்ளனர் என பொது சுகாதார மந்திரி சாமுவேல் ரோஜர் கம்பா கூறினார்.
இதுதவிர, 513 பேருக்கு சந்தேகத்திற்குரிய வகையிலான தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்த மரணம் சந்தேக அடிப்படையிலானவை. இருப்பினும், இந்த வியாதிக்கு உண்மையில் என்ன காரணம்? என்பது பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார்.
உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு சார்பில், உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.
இதுபோன்ற தீவிர பாதிப்புகளால் அது பிற நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், எபோலா பாதித்த நாடுகளில் இருந்து அல்லது அந்த நாடுகளின் வழியே இந்தியாவுக்கு வருகை தரும் விமான பயணிகளுக்கான சுகாதார அறிவுறுத்தல்களை, சுகாதார சேவைக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது.
இதன்படி, காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு எபோலா பாதிப்புகளோ அல்லது எபோலா பாதிப்புகளுடன் தொடர்புடைய நோயாளி அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களுடன் நேரடி ரத்த வழி தொடர்பு ஏற்பட்டால் அல்லது உடல் திரவத்தின் தொடர்பு ஏற்பட்டால், அவர்கள் அதுபற்றி விமான நிலைய சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அல்லது சுகாதார சேவை மையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதன்பின்னரே குடியுரிமை அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று காய்ச்சல், பலவீனம் அல்லது மயக்கம், தலைவலி, தசை வலி, வாந்தி, பேதி, தொண்டை வறட்சி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.