ஷில்லாங்,
மேகாலயாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 1ல் அங்கு 9வது முறையாக ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் 6ந்தேதியுடன் அதன் காலம் முடிவுக்கு வருகிறது.
இதனை தொடர்ந்து 60 தொகுதிகள் கொண்ட மேகாலயா சட்டசபைக்கான 10வது தேர்தல் பிப்ரவரியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் ஜனவரியில் அறிவிக்கும்.
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய குழுவினர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் 11 மாவட்டங்களின் எஸ்.பி. மற்றும் துணை ஆணையாளர் ஆகியோரை இன்று சந்தித்தனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அச்சல் குமார் ஜோதி மற்றும் அவருடன் தேர்தல் ஆணையாளர்களான ஓம் பிரகாஷ் ராவத் மற்றும் சுனில் அரோரா ஆகியோரும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட மேகாலயாவில் 2 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.