பாலக்காடு,
பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கடந்த 14-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வாலிபர் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்பின்னர் 15-ந் தேதி மதியம் 2 மணியளவில் கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்கு சென்று திரும்பிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவரை அவரது தந்தை கண்முன்னே மர்ம ஆசாமிகள் வெட்டி படுகொலை செய்தனர்.
மேலும் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பாலக்காடு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, அவர் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுபோன்று தொடர்ந்து கொலை குற்றங்கள் அரங்கேறி வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீசார், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.