தேசிய செய்திகள்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயர் சேர்ப்பு

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்தனர். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சமீபத்தில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்பட 18 பேரை இதுவரை கைது செய்து உள்ளனர். இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளி என கெஜ்ரிவாலை கூறியிருந்த அமலாக்கத்துறை, டெல்லி மந்திரிகள் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து இந்த ஊழலில் அவர் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் புதிதாக குற்றப்பத்திரிகை ஒன்றை அமலாக்கத்துறை நேற்று தாக்கல் செய்து உள்ளது. டெல்லி சிறப்பு கோர்ட்டில் நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளிகளாக சேர்த்து உள்ளது. அவர்கள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் தனிப்பட்ட குடிமக்களின் சங்கம் அல்லது அமைப்பாக வரையறுக்கப்படுகிறது என அமலாக்கத்துறை ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. எனவே நிதி மோசடி தடுப்புச்சட்டப்பிரிவு 70-ன் கீழ் கருதப்படும் 'நிறுவனம்' என வகைப்படுத்தலாம் என்று கூறியிருந்தது.

200-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட இந்த பத்திரிகை மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பதவியில் இருக்கும் ஒரு முதல்-மந்திரி மற்றும் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தாக்கல் செய்யப்படும் 8-வது குற்றப்பத்திரிகை இதுவாகும். முன்னதாக கவிதா மற்றும் 4 பேருக்கு எதிராக கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்