புதுடெல்லி,
பஞ்சாபின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் போலி பாஸ்போர்ட் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் சுக்பால்சிங் கைராவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன்படி பஞ்சாப், சண்டிகார், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள எம்.எல்.ஏ. மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
முன்னதாக பஞ்சாபின் பாசில்கா பகுதியில், 2015-ம் ஆண்டு போதைப் பொருள்கள் கடத்திய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,800 கிராம் போதைப் பொருள், தங்கக் கட்டிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததும் தெரியவந்தது. இவர்கள், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்ததும், போலி பாஸ்போர்ட் மோசடியிலும் இந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் சுக்பால் சிங் கைராவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.