சிக்கமகளூரு;
அறுவை சிகிச்சை
தாவணகெரே (மாவட்டம்) டவுன் கே.டி.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னப்பூர்ணம்மா (வயது 65). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அன்னப்பூர்ணம்மாவை அவரது குடும்பத்தினர் கே.ஆர். ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அன்னப்பூர்ணம்மா வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அறுவை சிகிச்சை செய்து தான் வயிற்றில் உள்ள கட்டியை அகற்ற முடியும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அன்னப்பூர்ணம்மாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்தனர்.
திடீர் சாவு
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த பிறகும் அன்னப்பூர்ணம்மா சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென்று உயிரிழந்தார். அப்போது, வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், சரியாக தையல் போடாததால் மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரது உடலை மருத்துவமனை முன்பு வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் டாக்டருக்கு எதிராக கோஷமும் எழுப்பினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.டி.ஜே. போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அன்னப்பூர்ணம்மாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.