ஐதராபாத்
ஐதராபாத்தில் நடந்த ஒரு பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் மேனகாகாந்தியின் மகனும் எம்பியுமான வருண்காந்தி கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் பல் இல்லாத புலி என்றும் குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதில் உள்நோக்கம் இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு, தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தித் தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்கிறது. ஆனால் அச்செயல்பாட்டை உண்மையிலேயே ஆணையம் மேற்கொள்கிறதா?
தேர்தல்கள் முடிந்தவுடன் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இதற்கு இருப்பதில்லை. அதற்காக உச்ச நீதிமன்றத்தையே தேர்தல் ஆணையம் அணுக வேண்டி உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் செலவினங்களை தாமதமாகத்தான் சமர்ப்பிக்கின்றன. ஒரே ஒருமுறை பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி மட்டுமே உரிய நேரத்தில் செலவினங்களை சமர்ப்பிக்காததால் அங்கீகாரத்தை இழந்தது. அக்கட்சி செலவினத்தைத் தாக்கல் செய்தவுடன் அதே நாளில் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
பாரதீய ஜனதா எம்.பி ஒருவரே தேர்தல் ஆணையத்தை விமர்சித்து இருப்பது பாரதீய ஜனதா தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையம் சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதியை மட்டும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தது. மத்திய அரசின் நெருக்கடியால் தான் குஜராத் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.