தேசிய செய்திகள்

மும்பையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த், மீண்டும் கைது

பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த், மும்பையில் கைதானபோது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவரை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்து மீண்டும் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்(வயது 24) என்பவர் கற்பழித்து கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள தஷ்வந்த், செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தனது தாய் சரளா(45) வையும் கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளுடன் தலைமறைவானார். அவரை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

தப்பி ஓட்டம்

தஷ்வந்த் மும்பையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மும்பை விரைந்து சென்ற தனிப்படை போலீசார், ரேஸ் கிளப்பில் விளையாடி விட்டு வெளியே வந்த அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நேற்று முன்தினம் அவரை மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வருவதற்காக வந்தனர். அப்போது அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர். தஷ்வந்த் தப்பி விடாமல் இருக்க போலீசார் அவரது இரு கைகளையும் சேர்த்து கை விலங்கு மாட்டி இருந்தனர்.

அவர் சாப்பிட வசதியாக அவரது வலது கையில் போடப்பட்டு இருந்த விலங்கை போலீசார் கழற்றினர். இடது கையில் விலங்கு தொங்கியபடி இருந்தது. போலீசார் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, திடீரென தஷ்வந்த் அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் சார்லசை தாக்கி விட்டு கை விலங்குடன் தப்பி ஓடி விட்டார். அவரை பிடிக்க சென்ற இரண்டு போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

மற்றொரு தனிப்படை விரைவு

இதையடுத்து மும்பை போலீஸ் நிலையத்தில் தமிழக போலீசார் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், தமிழக போலீசாருடன் சேர்ந்து தஷ்வந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மும்பை பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

தஷ்வந்தின் புகைப்படத்தையும் அனைத்து போலீஸ் நிலையங்கள், ஓட்டல், லாட்ஜ் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதற்கிடையில் தப்பி ஓடிய தஷ்வந்தை பிடிக்க சென்னையில் இருந்து மற்றொரு தனிப்படை போலீசாரும் மும்பை விரைந்தனர்.

மீண்டும் கைது

இந்த நிலையில் நேற்று மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இடது கையில் கட்டு போட்டபடி சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக தமிழக போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அது தஷ்வந்த்தான் என்பதை உறுதி செய்தனர்.

நேற்று முன்தினம் ஓட்டலில் போலீசாருடன் சாப்பிடும் வரை தாடியுடன் காணப்பட்ட தஷ்வந்த், போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடிய ஒரே நாள் இரவில் போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தனது சட்டையை மாற்றி விட்டு, தலை முடியையும் வெட்டிக்கொண்டுள்ளார். மேலும் தாடியை மழித்து அடையாளமே மாறி போய் இருந்தார்.

கையில் விலங்குடன் இருந்தால் மற்றவர்கள் சந்தேகப்படுவார்கள் என்பதற்காக கையில் அடிபட்டது போல் துணியால் கட்டு போட்டும் இருந்தார். உடனடியாக போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் தஷ்வந்த் மீண்டும் தப்பி ஓடினார். ஆனால் தமிழக போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து மீண்டும் கைது செய்தனர்.

பணம் வந்தது எப்படி?

தஷ்வந்த் தப்பி ஓடி விட்டதாக தமிழக போலீசார் அளித்த புகாரின்பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதால், அவரை மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு இன்று (சனிக்கிழமை) சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய தஷ்வந்த், நேற்று முன்தினம் இரவு முழுவதும் எங்கு தங்கி இருந்தார்?. அவருக்கு புதிய சட்டை வாங்கவும், தலை முடியை வெட்டி, தாடியை மழிப்பதற்கும் பணம் கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் தஷ்வந்திடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்த உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...