தேசிய செய்திகள்

“கோவில் இல்லை என்றாலும் இடத்தின் புனிதத்தன்மை நீடிக்கும்” - அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு வாதம்

கோவில் இல்லை என்றாலும் அந்த இடத்தின் புனிதத்தன்மை அப்படியே இருக்கும் என்று அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6-ந் தேதி தொடங்கி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று 9-வது நாளாக விசாரணை மீண்டும் தொடர்ந்தது. ராம் லல்லா தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் முன்வைத்த வாதங்கள் வருமாறு:-

இந்துக்கள் எப்போதுமே இந்த இடத்தில் வழிபாடு நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட உடைமை அல்லது சொத்து அன்னியப்பட்டு இருந்தால் மட்டுமே தவறான உடைமைக்கான கோரிக்கை என்ற கேள்வி எழும். சர்ச்சைக்குரிய இந்த சொத்து அல்லது இடம் ராமர் பிறந்த இடமாகும்.

அங்குள்ள விக்ரகம் எந்தவகையிலும் வணிகநோக்கு சார்ந்து வைக்கப்பட்டது அல்ல. அப்படி இருக்கும்போது வேறு யார் வேண்டுமானாலும் அங்கு ஒரு மசூதியை எழுப்பி அந்த உடைமையின் மீது தவறான உரிமை கோருவது என்ற கேள்விக்கே இடமில்லை.

ஒரு விக்ரகத்தை உடைப்பது அல்லது கோவிலை இடிப்பது என்ற கேள்விக்கும் இடமில்லை. ஒரு வாதத்துக்கு அங்கு கோவில் இல்லை என்று கூறினாலும் அந்த இடத்தின் புனிதத்தன்மை எப்போதுமே அங்கு இருக்கும்.

ராமர் இந்த இடத்தில் பிறந்து இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் இந்த இடத்துக்கான புனிதத்துவம் எப்போதும் உள்ளது. எனவே இந்த உடைமையை, இந்த இடத்தை வேறுவகையில் அணுக வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ராம ஜென்மபூமி புனர்உத்தார் (மறுசீரமைப்பு) சமிதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.என்.மிஸ்ரா வாதத்தை தொடர்ந்தார். அவர் தனது வாதத்தில் கூறியதாவது:-

பாபர் இந்த இடத்தில் மசூதி எதையும் கட்டவில்லை என்றும், இந்த இடத்தில் தொன்று தொட்டு இந்துக்கள்தான் வழிபாடு நடத்தி வருகிறார்கள் என்றும் நாங்கள் கூறிவருகிறோம். ஸ்கந்த புராணம், வால்மீகி ராமாயணம் ஆகியவற்றில் ராமரின் பிறந்த இடம் எங்கு உள்ளது என்று துல்லியமாக கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் இதிகாசங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலானது என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு எங்களுக்கு உண்மையில் வேண்டியது எல்லாம் பெளதிகரீதியான அளவுகோல்கள் மற்றும் ஆவணரீதியான தடயங்கள் மட்டுமே. இதிகாச புராணங்களில் இருந்து மேற்கோள்களை விட வலுவான தடயங்களில் மட்டுமே எங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. மசூதியை பாபர் கட்டினாரா அல்லது வேறு யாராவது கட்டினார்களா என்ற கேள்வியில் தொடர்பு என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அங்கு மசூதி இருந்திருக்கிறதா? என்பதுதான் முக்கியம் என்றும் கூறினார்கள். மூத்த வக்கீல் பி.என்.மிஸ்ராவின் வாதங்களை பிறகு கேட்பதாக கூறிய நீதிபதிகள் இந்து மகாசபா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.என்.சின்காவை வாதங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்