ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் இருந்து 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அகமது பட்டேலுக்கு வாக்களிக்காத அக்கட்சியின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சங்கர்சிங் வகேலா மற்றும் 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து 6 வருடங்களுக்கு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் நேற்று இரவு என்னை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்து உள்ளனர் என குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் ராமன்லால் வோரா கூறிஉள்ளார்.
சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திர சிங்கும் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளார். மாநிலங்களவை தேர்தலின் போது பா.ஜனதாவிற்கு வாக்களித்து, பா.ஜனதா தலைவர்களிடம் அதனை காட்டி தேர்தல் கமிஷனால் செல்லாத ஓட்டுக்கள் என அறிவிக்கப்பட்ட ஓட்டுகளை போட்ட காங்கிரஸ் கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்கள் ராகவ்ஜி பட்டேல் மற்றும் போலாபாய் கோகலே ஆகியோரும் ராஜினாமா செய்து உள்ளனர். ராமன்லால் வோரா பேசுகையில், அவர்களிடம் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக ராஜினாமா செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பினேன், அவர்களிடம் இருந்து எதிர்மறையான பதில்கள் வந்தது, என்றார்.
சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திரசிங் வகேலா பேசுகையில், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் விவகாரத்தில் அனைத்து விதிமுறைகளையும் நாங்கள் முடித்துவிட்டோம், என்றார். இப்போது ராஜினாமா செய்து உள்ள எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவில் இணைய உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே சங்கர்சிங் வகேலா ஆளும் பாரதீய ஜனதாவில் இணைய மாட்டார் என அவருடைய மகன் மகேந்திரசிங் வகேலா கூறிஉள்ளார்.