புதுடெல்லி,
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், வரும் 24 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வரை தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இரண்டுமே அதிகமாக இருந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் பாதிப்பு விகிதம் சற்று குறைந்துள்ளது.