தேசிய செய்திகள்

புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காதவர்களுக்கான வசதிகள் குறையும் - வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காதவர்களுக்கான வசதிகள் குறையும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அதிகம் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. நாட்டில் 53 கோடி பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையில் (பிரைவசி பாலிசி) மாற்றம் செய்வதாக இந்நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிவித்தது.

பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளவே இந்த ஏற்பாடு என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பயனாளர்கள் புதிய விதிகளை ஏற்பதற்கு பிப்ரவரி 8-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் மே 15 வரை அது நீட்டிக்கப்பட்டது. அந்த தேதிக்குப் பிறகும் அப்டேட்களை ஏற்காதவர்களின் கணக்கு நீக்கப்படாது, ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல்கள் அனுப்பப்படும் என கடந்த வாரம் வாட்ஸ்அப் அறிவித்தது.

இந்நிலையில் வாட்ஸ்அப் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், தொடர்ந்த நினைவூட்டல்களுக்குப் பின்னும் பயனாளர் புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால், ஒரு கட்டத்தில் அவரால் சாட் லிஸ்டை பயன்படுத்த முடியாது. அதேநேரம், அழைப்புகள், வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். நோட்டிபிகேஷன்ஸ் எனேபில்டு ஆகியிருந்தால், தகவல்களை படிக்க, பதிலளிக்க முடியும். மிஸ்டு கால் அல்லது வீடியோ காலுக்கு திருப்பி பதிலளிக்க முடியும்.

அதன்பிறகு சில வார கால அவகாசத்துக்குப் பின்பும் பயனாளர் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டால், அவருக்கு அழைப்புகள், நோட்டிபிகேஷன்கள் வராது. அவற்றை குறிப்பிட்ட பயனாளரின் செல்போனுக்கு அனுப்புவதை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்திவிடும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...