ஷில்லாங்
அமெரிக்காவில் தனிநபர் வரி வசூல் செய்யும் அமைப்பு இண்டெர்னல் ரெவின்யூ செர்வீஸ் (ஐஆர்எஸ்) ஆகும். இந்த அமைப்பின் ஊழியர்களாக கூறிக்கொண்டு அமெரிக்க வரி செலுத்துவோரிடம் உங்களது வரிகளை சரிவர செலுத்தவில்லை ஆதலால் நாங்கள் சொல்கிறபடி வரியை செலுத்துங்கள் என்று ஷில்லாங்கில் இருந்தபடி ஆணை பிறப்பித்துள்ளனர். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல நேரிடும் என்று கூறிய கால் செண்டர் ஆட்கள் வரி செலுத்துவோரின் தகவல்களை ஒரு சில இணையதளங்களிலிருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய சிலர் பணமும் செலுத்தியுள்ளனர்.
இப்படி வசூலிக்கப்பட்ட பணத்தில் பாதியை ஹவாலா முகவர்கள் மூலம் ஷில்லாங்கிற்கு கொண்டு வரப்பட்டு கால் செண்டர் நடத்தும் நபர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வரிப்பணத்தின் பெரும்பகுதி அகமதாபாத்தில் செயல்படும் முக்கிய நபர்களின் வசம் சென்று விடும்.
இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் இப்போலி கால் செண்டரை ரெய்டு செய்துள்ளனர். அங்கிருந்து 100ற்கும் மேற்பட்ட கணினிகளையும், ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றிதோடு ஆறு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து முழுமையான அளவில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.