புதுடெல்லி,
என்ஜினீயரிங் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அதிகாரிகள் என்ற பெயரில் வேலைக்கு ஆள் தேர்வு நடப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது;-
ஏ.ஐ.சி.டி.இ.யில் மண்டல அதிகாரிகள், தலைமை மண்டல அதிகாரிகள், தாலுகா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஆள் தேர்வு செய்யப்படுவதாக, ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு போலி நபர்கள் வேலை தேடுபவர்களை அணுகி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்தகைய ஆள் தேர்வு எதுவும் ஏ.ஐ.சி.டி.இ. நடத்தவில்லை. அவர்கள் நடத்தும் போலி ஆள் தேர்வுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அத்தகையவர்கள் குறித்து எங்கள் அதிகாரபூர்வ மின்னஞ்சலில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.