புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினை குறித்த விவாதம் நேற்று நடந்தது. இதில் பேசிய தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினை குறித்து எடுத்துக்கூற எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இங்கு உள்ள சில தி.மு.க. உறுப்பினர்கள் தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மாநில அரசு தான் காரணம் என்பதுபோல் சில பொய்யான குற்றசாட்டை தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்ததும், முக்கிய நீர் ஆதாரங்கள் வறண்டு போனதும் தான் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியமான காரணங்கள். தி.மு.க. உறுப்பினர்கள் தவறான தகவலை இங்கு தெரிவித்தனர்.
குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சரியான பட்டியலை நான் வைத்துள்ளேன். அவர்கள் விரும்பினால் அதனை வழங்குகிறேன். அதை அவர்களது ஊடகத்தில் வெளியிடலாம். இப்பட்டியலை மறைக்காமல் அவர்களது ஊடகத்தில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் (சபாநாயகர்) தயவு செய்து எனக்கு நேரம் வழங்கினால் நான் தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.