புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் கார்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தி விடும் என குற்றம் சாட்டி, அவற்றை திரும்பப்பெறுமாறு விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இமாசல பிரதேசத்தில் ஆப்பிள் கொள்முதல் விலையை ரூ.16 ஆக தொழில் அதிபர் அதானி குறைத்திருப்பதால், சந்தைகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மத்திய அரசை சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், மத்திய அரசின் கருப்பு விவசாய சட்டங்களுக்கு விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? ஏனென்றால் விவசாயிகளின் கடின உழைப்பால் வளர்க்கப்படும் பயிர்களுக்கான விலை மற்றும் பிற விஷயங்களை தீர்மானிக்கும் உரிமை பா.ஜனதாவின் கோடீஸ்வர நண்பர்களுக்கு வழங்கப்பட்டால், இதுதான் நடக்கும் என குறிப்பிட்டு உள்ளார். இந்த கருப்பு விவசாய சட்டங்கள் அனைத்தும் பா.ஜனதாவின் கோடீசுவர நண்பர்களுக்கே பலனளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.