ஜெய்பூர்,
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு 3 திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டாக போராடி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற உள்ளதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவை விவசாய அமைப்புகள் வரவேற்று உள்ளன. அதேநேரம் மேற்படி 3 சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் முறைப்படி திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாகவும் விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்துப் பேசிய ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார். இது குறித்து கல்ராஜ் மிஸ்ரா கூறுகையில், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்க அரசாங்கம் முயற்சித்தது.
ஆனால் அவர்கள் அச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். தற்போது இச்சட்டங்களை திரும்பப் பெற்று விட்டு, தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் கருதுகிறது. தற்போதைக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.