தேசிய செய்திகள்

டெல்லியில் டிராக்டர் பேரணியில் திரண்டு வந்து கலந்து கொண்ட விவசாயிகள்

அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 43-வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே இரு தரப்பினரும் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் அணி திரண்டு இன்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்படி, டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்பட டெல்லியின் நான்கு எல்லைகளில் இருந்தும் இந்த பேரணி இன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோன்று, முக்கிய பகுதியான சிங்கு எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணியை முன்னிட்டு அரியானாவில் உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் சுங்க சாவடி பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள் பல்வால் பகுதி வரை டிராக்டர் பேரணியாக செல்ல முடிவு செய்திருந்தனர். பின்னர் இதில் மாற்றம் செய்து, நொய்டா வரை டிராக்டரில் பேரணியாக சென்று விட்டு காஜிப்பூருக்கு திரும்புவது என்று முடிவு செய்துள்ளனர்.

பேரணியை கண்காணிக்க போலீசார் போதிய அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். பேரணியை வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று காசியாபாத் மாவட்டத்திற்கான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நகரம்) சைலேந்திர குமார் சிங் கூறியுள்ளார்.

அரியானாவில் பல்வால் பகுதியில் இருந்தும் விவசாயிகள் பேரணியாக டிராக்டரில் புறப்பட்டு சென்றுள்ளனர். ராஷ்டீரிய கிசான் மஜ்தூர் மகாசங்க தேசிய தலைவர் சிவ குமார் ககா கூறும்பொழுது, சிங்கு எல்லை வரை பேரணியாக செல்ல இருக்கிறோம் என கூறியுள்ளார். வேளாண் சட்ட எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் விவசாயிகள் திரளாக பேரணியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை