புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை முடிவுக்கு கொண்டு வந்துவிடும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தங்களை கையேந்த வைத்து விடும், சந்தைமுறையை ஒழித்துக்கட்டிவிடும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்,
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ராஷ்டிரீய சோசலிஸ்டு கட்சி, சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் டெல்லியில் நேற்று கூடி விவாதித்தன. இதில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஒத்திவைப்பு நோட்டீஸ்களை நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராஷ்டிரீய சோசலிஸ்டு கட்சி தலைவர் என்.கே.பிரேமசந்திரன் கூறியதாவது:-
3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகியவை மிக முக்கியமான பிரச்சினைகள் ஆகும். இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பும். விவசாயிகள் பிரச்சினையில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை மறித்து பதிவு செய்யும் விவகாரம் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.