விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு விலையை உயர்த்த வேண்டும், நிலுவைத்தொகை ரூ.250 கோடியை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜலந்தரில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இது அங்கு சாலை, ரெயில் போக்குவரத்தை முடக்கி உள்ளது.
ரெயில்கள் ரத்து
இதனால் லூதியானா-அமிர்தசரஸ், லூதியானா-ஜம்மு ரெயில் தடத்தில் 40 ரெயில்கள் ரத்தாகி உள்ளன.நேற்று ஒரே நாளில் 20 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.இந்த ரெயில்கள் ரத்தால், ஜம்முவில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித்தவித்தனர்.பெரோஸ்பூர் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் 69 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரெயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டதாகவும், இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் போய்ச்சேர வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியுற்றனர்.
சாலை போக்குவரத்து பாதிப்பு
சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி உள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் அவற்றை அகற்ற மாட்டோம் என தெரிவித்தனர். ஜலந்தர், அமிர்தசரஸ், பதான்கோட் நகரங்களில் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி உள்ளதால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதித்துள்ளது.