தேசிய செய்திகள்

ஊரடங்கு அச்சம்: மும்பையில் காய்கறி வாங்க அலைமோதிய மக்கள்

மராட்டியத்தின் மும்பை நகரில் ஊரடங்கு அச்சம் எதிரொலியாக காய்கறி வாங்க மக்கள் தாதர் மார்க்கெட் பகுதியில் குவிந்தனர்.

தினத்தந்தி

புனே,

கொரோனா தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இடம் பெற்றுள்ள இந்தியாவில் மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு நிர்வாகமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.

மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்த அரசு முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது.

ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான பால் பூத், காய்கறி, பழம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டன.

பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஒரு வார கால ஊரடங்கை முன்னிட்டு நாக்பூர் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் வெளியே வருவோரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் போலீசார் காரணங்களை கேட்டறிந்த பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்குகின்றனர்.

மராட்டியத்தின் மும்பை நகரில் நேற்று ஒரே நாளில் 1,712 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான சாத்திய கூறுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக பல நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி இருப்பில் வைத்து கொள்கின்றனர். ஊரடங்கு அச்சம் எதிரொலியாக மராட்டியத்தின் மும்பை நகரில் தாதர் மார்க்கெட் பகுதியில் இன்று காலையிலேயே மக்கள் அதிக அளவில் குவிந்து விட்டனர்.

அவர்களில் பலர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசங்களை அணியாமலும் திரண்டிருந்தனர். ஒருபுறம் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வாகனங்களும், மறுபுறம் திரண்டிருந்த மக்களும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வழிவகுத்தது.

இதனால், கொரோனா பாதிப்புகளை மக்களே வலிய சென்று தேடி கொள்ளும் அவலநிலை காணப்படுவதுடன், கொரோனா பரவலுக்கான சூழலும் அதிகரித்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்