சீதாபூர்,
உத்தரபிரதேச மாநிலத்தில் பல அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை அம்மாநில போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி முடிவுக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்து வரும் குற்றவாளிகள் தங்களது ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் இந்தரஜித் சிங் கூறுகையில், லாஹபூர் போலீஸ் நிலையத்தில் சுமார் 20 வழக்குகளில் தொடர்புடைய ரஞ்ஜீத் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிறையிலிருந்து வெளியேறினான். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் லாஹபூர் போலீஸ் நிலையத்தில் தான் உறங்குகிறான். இதேபோல் 7 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அன்கீத், ஷ்யாமு சிபஹி போன்ற குற்றவாளிகள் இரவு வேளைகளில் போலீஸ் நிலையங்களிலேயே உறங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது குற்ற செயல்களில் இருந்து வெளியேறி விட்டார்கள். மாநிலத்தில் நடைபெறும் எந்தவொரு குற்ற வழக்குகளிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை.
குற்ற வழக்குகள் குறைந்து காணப்படும் இவ்வேளையில், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடும் அனைவருக்கும் தகுந்த பாடத்தினை கற்றுக்கொடுப்போம் என கூறினார்.