புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதால், அவற்றை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 19-ந்தேதி அறிவித்தார்.
இதை விவசாயிகள் வரவேற்றுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் முறைப்படி திரும்பப்பெறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்தநிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் 24-ந்தேதி நடைபெறுகிறது. இதில், அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் மற்றும் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவானது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.