புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டம் ஆனது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக மாணவ-மாணவியர்களும் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதேபோன்று டெல்லி சீலாம்பூர், ஜாபராபாத்திலும் போராட்டம் நடந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 15ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வெடித்த வன்முறை தொடர்பாக, டெல்லியில் போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களை அடையாளம் தெரியாதவர்கள் என குறிப்பிட்டு உள்ளனர்.
பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் குடியுரிமை பெறாத மாணவர்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 வது பிரிவை மீறியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 மற்றும் 341 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.