புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடரின் முதற்கட்ட கூட்டம் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து, அதற்கு நிதி மந்திரியும் பதிலளித்து விட்டார்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடரின் முதற்கட்டகூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பட்ஜெட் தொடரின் 2-ம் கட்ட கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி மீண்டும் கூடுகிறது.
முன்னதாக நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட கூட்டம் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்ட கூட்டம் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.