ராய்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து 150 பயணிகளுடன் கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச்சென்ற இண்டிகோ விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் காலை 9.50 மணிக்கு புறப்பட்டுச்சென்ற சிறிது நேரத்தில் பறவை மோதியதையடுத்து மீண்டும் ராய்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் விமானத்திற்கும் பெரிய சேதம் எதுவும் இல்லை என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் கொல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, ராய்பூரில் இருந்து ஐதரபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது நினைவிருக்கலாம்.