கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், 15 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள வன உயிரியல் பூங்காக்களும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பவில்லை. திப்ரு-சைகோவா தேசிய பூங்கா, 70 சதவீத அளவுக்கு தண்ணீரில் மிதக்கிறது. அதனால், அங்குள்ள பெரும்பாலான விலங்குகள் மேடான பகுதிகளுக்கு சென்று விட்டன.
சில விலங்குகள் வள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டன. இதுவரை 3 காட்டு குதிரைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டன. மேலும் 2 காட்டு குதிரைகள் உயிருடன் மீட்கப்பட்டன. அவற்றின் உடல்நிலை மோசமாக உள்ளது.
புகழ்பெற்ற காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில், 50 சதவீத நிலப்பகுதி தண்ணீரில் மூழ்கி உள்ளது. அந்த பூங்கா வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதை தாண்டி மேடான பகுதிகளுக்கு விலங்குகள் சென்று வருகின்றன.
அப்படி சாலையை கடந்த ஒரு மான், அவ்வழியாக சென்ற வாகனத்தில் அடிபட்டு இறந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
வெள்ளம் அதிகரித்து வருவதால், இன்று (திங்கட்கிழமை) நிலைமை மேலும் மோசமடையும் என்று பூங்காவின் இயக்குனர் சிவகுமார் தெரிவித்தார்.