தேசிய செய்திகள்

கேரளாவில் பெருவெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது.

கோட்டயம்,

அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கடந்த 16ந்தேதி ஒருவர் பலியானார். இதேபோன்று, கோட்டயம் நகரின் ஊரக பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கிய 12 பேரை காணவில்லை. எனினும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரால் சம்பவ பகுதிக்கு செல்ல முடியவில்லை.

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 23 ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்து உள்ளது.

அவர்களில் 22 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் புதைந்தும் போயுள்ளன.

2 அடுக்கு வீடு ஒன்று ஆற்றில் அடியோடு விழுந்து மூழ்கியது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து உள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெருமளவிலானோர் குழந்தைகள் ஆவர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...