ராஞ்சி,
1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்.காங்கிரசை வீழ்த்தி ஆட்சி யைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார்.
அப்போது கால் நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக
எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
இதையடுத்து பாட்னா ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரியாக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல் களும், லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.
பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 11 பேர் இறந்து விட்டதால் மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. லல்லு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜெயிலில் தண்டனை அனுபவித்த 2 மாதங்களில் லல்லு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார். லல்லு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் டில் நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து லல்லு பிரசாத் இன்று அவர் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் மகனும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவும் வந்தார். கோர்ட்டுக்கு வந்த நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.
இது குறித்து லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது:-
தீர்ப்பு எதுவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க பீகாரில் உள்ள மக்கள் பராமறிக்க கேட்டு கொள்கிறேன். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாரதீய ஜனதா போல் சதி திட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினார்.