தேசிய செய்திகள்

ஜேசுதாஸ், ஜக்கி வாசுதேவ், சோ உள்பட 89 பேருக்கு விருது வழங்கப்படுகிறது தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு ‘பத்ம’ விருது மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 89 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 89 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜேசுதாஸ், ஜக்கி வாசுதேவ், சோ உள்ளிட்டோர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை படைக்கிறவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.

பத்ம விருது பட்டியல்

குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு, பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த ஆண்டு மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 7 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 75 பேருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 89 பேர் விருதுப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

கே.ஜே. ஜேசுதாஸ்- ஜக்கி வாசுதேவ்

தனது காந்தக் குரலால் அத்தனை பேரையும் கட்டிப்போட்டு விடும் பிரசித்தி பெற்ற பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாசுக்கு (வயது 77) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1975-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2002-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் பெற்றவர் என்பது சிறப்பு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிகவாதியும், யோகா குருவும், ஈஷா அறக்கட்டளை நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவும் பத்ம விபூஷண் விருது பெறுகிறார்.

சரத் பவார்- யூ.ஆர்.ராவ்

மராட்டிய மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரி யுமான சரத் பவார், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான முரளி மனோகர் ஜோஷி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான யூ.ஆர்.ராவ். என்றழைக்கப்படுகிற பேராசிரியர் உடுப்பி ராமச்சந்திரராவ் ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கு பிந்தைய நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சுந்தர்லால் பட்வாவுக்கும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

சோ- மாரியப்பன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் பத்ம விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு மரணத்துக்கு பிந்தைய நிலையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், நடிகர், நாடக ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர்.

கடந்த ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித்தந்த சேலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.கே. மூர்த்தி- சுனிதி சாலமன்

டி.கே.எம்., கிட்டு, கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படுகிற மிருதங்க இசைக்கலைஞர் டி.கே. மூர்த்திக்கு 93 வயதில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த ஊர், தஞ்சாவூர்.

இவர் பிரசித்தி பெற்ற இசைக்கலைஞர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக மிருதங்கம் வாசித்தவர். ஐ.நா. சபையில் 1966-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23-ந் தேதி எம்.எஸ். சுப்புலட்சுமி இசைக்கச்சேரி நடத்தியபோது, அவருக்கு மிருதங்கம் வாசித்தவர் டி.கே. மூர்த்திதான். 6 தலைமுறை கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்த சிறப்புக்குரியவர்.

எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், வரலாற்று ஆசிரியர் மைக்கேல் டேனினோ (இவரது பூர்விகம், பிரான்ஸ்), சமூக சேவையாளரும், விவேகானந்தா கேந்திராவின் துணைத்தலைவருமான நிவேதிதா ரகுநாத் பிடே ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மரணத்துக்கு பிந்தைய நிலையில், டாக்டர் சுனிதி சாலமனுக்கு மருத்துவ துறையில் சாதனை படைத்ததற்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியில் இவர் பிரசித்தி பெற்றவர். இந்தியாவிலேயே முதன்முதலாக 1985-ம் ஆண்டு சென்னையில் முதல் எய்ட்ஸ் நோயாளியை கண்டறிந்தவர் இவர்தான். இவருக்கு மத்திய அரசு ஏற்கனவே தேசிய பெண் உயிரி விஞ்ஞானி விருதை வழங்கியது நினைவுகூரத்தக்கது.

பத்ம பூஷண் விருது

சோவுடன் பத்ம பூஷண் விருது பெறுகிற 6 பேர், விஸ்வமோகன் பட் (ராஜஸ்தான்), தேவி பிரசாத் திவிவேதி (உத்தரபிரதேசம்), தேஹம்டன் உத்வாடியா (மராட்டியம்), ரத்ன சுந்தர் மகாராஜ் (குஜராத்), நிரஞ்சன் நந்தா சரஸ்வதி (பீகார்), தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிந்தோர்ன் ஆகியோர் ஆவார்கள்.

விராட் கோலி, விளையாட்டு நட்சத்திரங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சேகர் நாயக் (கர்நாடகம்), வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா (கர்நாடகம்), கடந்த ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை தீபா மாலிக் (கர்நாடகம்), ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் (திரிபுரா), இந்திய ஆக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் (கேரளா), ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (அரியானா) ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார்கள்.

விழா

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கதகளி நடனக்கலைஞர் செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் 100 வயதை எட்டியுள்ள நிலையில் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார்.

நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் (கர்நாடகம்), 92 வயதான கர்நாடக இசைக்கலைஞர் பரசால பி. பொன்னம்மாள், தேசிய விருது பெற்ற சினிமா பின்னணி பாடகி அனுராதா பாத்வால் (மராட்டியம்), களரிபயட்டு தற்காப்பு கலை வீராங்கனை மீனாட்சியம்மா (கேரளா) ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபலங்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு பத்ம விருது வழங்கும் விழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.