தேசிய செய்திகள்

நேர்மையான விசாரணைக்கு எம்.ஜே. அக்பர் பதவி விலக வேண்டும் - பத்திரிக்கையாளர் சங்கங்கள்

நேர்மையான விசாரணைக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வரும் எம்.ஜே.அக்பர் பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியபோது, சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மீ டூ இயக்கம் மூலம் வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்பட 11 பெண் பத்திரிகையாளர்கள் புகார் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் பதவி விலக மறுப்பு தெரிவித்துவிட்ட எம்.ஜே. அக்பர், முதலாவதாக புகார் தெரிவித்த பத்திரிக்கையாளர் பிரியா ரமணிக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

எம்.ஜே. அக்பர் வழக்கு தொடர்வேன் என்று கூறிய போதே பிரியா ரமணி எந்தஒரு அவதூறு வழக்கிலும் உண்மைதான் மகத்தான பாதுகாப்பு. நான் கவலைப்படப்போவது கிடையாது, என்று கூறிவிட்டார்.

பத்திரிக்கையாளர் சங்கங்கள்

இந்நிலையில் நேர்மையான விசாரணைக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சரின் பதில்களுக்கு மிகுந்த வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண் பத்திரிகையாளர் சங்கம், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, பிரஸ் அசோசியேஷன் மற்றும் தெற்காசிய பெண் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், எம்.ஜே. அக்பரின் பதில்கள், அவர் வகிக்கும் பொறுப்புக்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக மிரட்டல் மற்றும் பயமின்றி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் நியாயமான விசாரணை, ஒழுக்கம் மற்றும் பொது உரிமையின் நலனுக்காக, விசாரணை முடியும் வரையில் எம்.ஜே. அக்பர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த முடிவை எடுக்காமல், சட்டபூர்வமான நடவடிக்கை என புகார் தெரிவித்தவர்களை மிரட்டியுள்ளார், இது மிகவும் அதிருப்தியை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து