புதுடெல்லி,
தற்போது, அவசர போலீஸ் உதவிக்கு 100 என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு 101 என்றும், ஆம்புலன்சுக்கு 108 என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் (ஹெல்ப்லைன்) உள்ளன.
இந்நிலையில், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் 112 என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் 911 என்ற ஒரே எண் இருப்பதுபோல், இந்தியாவில் இதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தில் இணைய ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக அவசர உதவி மையம் உருவாக்கப்பட வேண்டும். அங்கு அவசர உதவி அழைப்புகளை கையாள பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த மையங்கள், மாவட்ட கட்டுப்பாட்டு மையத்துடனும், அவசர உதவி வாகனங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும். இதை செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.321 கோடியே 69 லட்சம் வழங்குகிறது.
இந்த திட்டம், இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.
இந்நிலையில், தமிழநாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வருகிற 19-ந்தேதி இத்திட்டத்தில் இணைகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.
இந்த எண் மூலம் உதவி பெறுவதற்கு, தொலைபேசியில் 112 எண்ணை அழுத்தலாம் அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள எச்சரிக்கை பொத்தானை 3 தடவை விரைவாக அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும். சாதாரண செல்போனில் 5 அல்லது 9-ம் எண்ணை நீண்ட நேரம் அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும்.
இதுதவிர, இணையதளம் மூலமாகவும், 112 என்ற ஆப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென ஷவுட் என்ற அம்சமும் உள்ளது. அதை பயன்படுத்தினால், பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் உஷார்படுத்தப்பட்டு உதவிக்கு வருவார்கள்.