தேசிய செய்திகள்

கருவூல முறைகேடு வழக்கில் லாலு பிரசாத் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

லாலு பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற ஜனவரி 22-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ராஞ்சி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும் ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத்தீவன ஊழலுடன் தொடர்புடைய தும்கா கருவூல முறைகேடு வழக்கில் 14 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு இத்தண்டனையை விதித்தது.

அதில் ஜாமீன் கோரும் லாலு பிரசாத் மனு மீதான விசாரணை ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் சி.பி.ஐ. நேற்று முன்தினம் துணை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், லாலு பிரசாத் சிறை நடைமுறைகளை மீறியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது லாலு பிரசாத்தின் உடல்நிலை சீராக இருப்பதால், அவரை ராஞ்சி ஆஸ்பத்திரியில் இருந்து சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியது. அதற்கு பதில் அளிக்கவும், லாலு பிரசாத்தின் நீதிமன்ற காவல் குறித்து சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் 6 வார கால அவகாசம் வேண்டும் என அவரது வக்கீல் தேவர்ஷி மண்டல் கோரிக்கை விடுத்தார். சி.பி.ஐ. வக்கீலும் அதை ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, லாலு பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற ஜனவரி 22-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.