புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகள் மூலம் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். லடாக் எல்லை விவகாரம், கொரோனா பாதிப்புகள், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் நிலவி வரும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை காரணமாக நமது இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலைவாய்ப்பின்மை நாள் என்று அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவில் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் வெளியான அறிக்கையையும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.