தேசிய செய்திகள்

காங்கிரசுக்கு ‘சீட்’ கொடுத்தால் டெபாசிட் கூட வாங்காது: லல்லுபிரசாத் யாதவ்

பீகாரில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு சீட் கொடுத்திருந்தால் டெபாசிட் கூட வாங்காது என்று லல்லுபிரசாத் யாதவ் கூறினார்.

தினத்தந்தி

காங்கிரசுக்கு சீட் இல்லை

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றியை தவற விட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததும், பெரும்பாலான இடங்களில் அக்கட்சி தோல்வி அடைந்ததும்தான் காரணம் என்று ராஷ்டிரீய ஜனதாதளம் கருதியது.

இதற்கிடையே, பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றிருந்த 2 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததால், காலியாக உள்ள அத்தொகுதிகளுக்கு 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இவற்றில், குஷேஷ்வர் அஸ்தான் என்ற தொகுதி, கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு தோற்ற தொகுதி ஆகும். எனவே, அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்பார்த்தது. ஆனால், அக்கட்சிக்கு ஒதுக்காமல், ராஷ்டிரீய ஜனதாதளமே அங்கு போட்டியிடுகிறது. இதனால், இரு கட்சிகளிடையிலான கூட்டணி முறிந்து விட்டதாக கருதப்படுகிறது.

டெபாசிட்

இந்தநிலையில், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு டெல்லியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லுபிரசாத் யாதவ், நேற்று அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்காதது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு லல்லு கிண்டலாக, காங்கிரஸ் தோற்பதற்கு நாங்கள் தொகுதி ஒதுக்க வேண்டுமா? அப்படி ஒதுக்கினால், டெபாசிட்டை கூட இழந்து விடும் என்று பதில் அளித்தார்.

பிரசாரம் செய்வாரா?

ராஷ்டிரீய ஜனதாதளத்தை விமர்சித்து வரும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பக்த சரண்தாசை அவருக்கு ஏதாவது தெரியுமா? என்று லல்லு கிண்டலடித்தார்.

இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அதுபற்றி முடிவு செய்வேன் என்று லல்லு கூறினார். மேலும், தன் இரு மகன்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை என்று மறுத்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்