தேசிய செய்திகள்

விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமை யில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், விண் வெளிக்கு 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழா உரையில், 2022-ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் என்று அறிவித்தார். இதற்காக ஏற்கனவே ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை பெறுவதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

மந்திரிசபை கூட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) 3 இந்தியர்களை 7 நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முதல் முயற்சியை நிதி ஒதுக்கப்பட்ட 40 மாதங்களுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான அரவை கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.9,521 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு இது ரூ.7,511 ஆக உள்ளது. அதேபோல முழு கொப்பரை தேங்காய் குவிண்டால் ரூ.9,920 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது தற்போது ரூ.7,750 ஆக உள்ளது.

இது விவசாயிகளுக்கு சரியான விலை வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தென்னை பயிரிடுதலில் முதலீட்டை அதிகரிக்கவும், உற்பத்தியையும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை (போக்சோ 2012) திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும்.

இந்த சட்டத்தின் பிரிவுகள் 4, 5, 6 ஆகியவை மரண தண்டனை உள்பட கடும் தண்டனைகள் வழங்குவதற்கு வகை செய்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன், விரிவு படுத்தப்பட்டுள்ளது. குழந்தை களின் பாலியல் ஆபாச காட்சிகளை வெளியிடுதல், விரைவாக பருவ வயதை அடைவதற்காக ஹார்மோன்கள், செயற்கை மருந்துகள் செலுத்துவது ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

2018 இந்திய முறை மருத்துவ தேசிய ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலுக்கு பதிலாக புதிய அமைப்பை உருவாக்க வகை செய்கிறது. இந்த முறையிலான மருத்துவ துறையில் பட்டம் பெறும் அனைவரும் பணியாற்றுவதற்கான உரிமங்களை பெற பொது நுழைவு மற்றும் வெளியேறும் தேர்வுகள் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஓமியோபதி ஆணையம் 2018-க்கான வரைவு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதுள்ள மத்திய ஓமியோபதி கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் தேசிய ஓமியோபதி ஆணையம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கடலோர பகுதிகள் பாதுகாக்கப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். கடலோர பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதோடு, வாழ்க்கை தரம் உயர வழிவகுக்கும்.

கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிடங்கள், ஆடை மாற்றும் அறைகள், குடிநீர்வசதி போன்றவை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மாசு சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டு அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்தியா- சா தோம் பிரின்சிபி நாட்டுடன் விண்வெளி ஆராய்ச்சி ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ககன்யான் திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த திட்டத்துக்காக இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-111 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. தேவையான அடிப்படை கட்டமைப்பு, வீரர்களுக்கான பயிற்சி, தரை கட்டுப்பாட்டு வசதி போன்றவை உருவாக்கப்படும். இதற்காக 2 ஆளில்லா விமானங்கள், ஒரு ஆட்கள் செல்லும் விமானம் பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து