புதுடெல்லி
இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் மீது இந்தித் திணிப்பு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மற்றும் எம்.பில் பட்ட மாணவர்கள் தங்களது ஆய்வு திட்டங்களின் தலைப்பை அவர்களது பெயர், துறையின் பெயர் இவற்றோடு இந்தியில் மொழிபெயர்ப்பு/ ஒலிபெயர்ப்பு செய்து கொடுக்காவிட்டால் அந்த ஆய்வுரைகள் ஏற்கப்படாது என்று நிர்வாகம் தெரிவித்ததாக புகார் கூறினர்.
இது பற்றி கேட்டப்போது மூத்த அதிகாரி ஒருவர் சென்ற ஆண்டும் மாணவர்கள் இவ்வாறு இந்தியில் விவரங்களை எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றார்.
இது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செய்யப்படுகிறது. பட்டச் சான்றிதழ்கள் சென்றாண்டு முதல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார் அந்த அதிகாரி.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இது பற்றி கூறியதாவது:- அவர்கள் எங்களது சான்றிதழ்களை இந்தியில் ஒலிபெயர்ப்பு (டிரான்ஸ்லிட்டரேஷன்) செய்து கொடுக்க திட்டமிடுகிறார்கள். இந்தி தேசிய மொழியாக இல்லாவிட்டாலும் அதற்கு அதிகார அமைப்புக்களின் பாதுகாப்பு இருக்கிறது என்றார்.
ஆய்வு பட்ட உரைகளை சமர்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். பல இந்தி பேசாத மாநிலங்களைச் சாராத மாணவர்கள் தங்களால் இந்தியில் எழுதித்தர இயலவில்லை என்று கூறியுள்ளனர். மற்றொரு மாணவர் இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்றார்.
வங்காளத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நிறைய மாணவர்கள் கொடுமையை சந்தித்தனர். நாங்கள் இதைச் செய்ய வற்புறுத்தப்படுகிறோம். தொழில்நுட்ப சொற்களை ஒலிபெயர்ப்பு செய்வது கடினமானது என்றார்.
மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் பல மாணவர்கள் விவரங்களை தங்கள் தாய் மொழியில் எழுதி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்றார்.
ஒரு மாணவி, மத்திய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே எவ்வித பரிசீலனையும் இன்றி ஜே என் யூ நிர்வாகம் ஏற்கிறது. இம்முறை மத்திய பல்கலைக்கழகம் ஒன்றில் இந்தித் திணிப்பு நடைபெறுகிறது என்றார்.