மும்பை,
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளியான நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம். இவர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார் என இந்திய அரசால் நம்பப்படுகிறது. இவரது உதவியாளராக இருந்தவர் ஷகீல் அகமது ஷேக்.
கடந்த 1992ம் ஆண்டு அரசால் நடத்தப்படும் ஜே.ஜே. மருத்துவமனையின் பொது வார்டில் அருண் காவ்லி கும்பலை சேர்ந்த ஷைலேஷ் ஹல்டாங்கர் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற இப்ராகிமின் கூட்டாளிகள் 24 பேர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி அவரை கொன்றனர்.
இப்ராகிமின் உறவினரான இஸ்மாயில் பர்காரை கொன்றதற்கு பழிவாங்க ஹல்டாங்கர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக இருந்தவர் ஷகீல். இவர் துபாய்க்கு தப்பி சென்றார். ஆனால் அங்கிருந்தபடி மும்பையில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி வந்துள்ளார்.
லம்பு ஷகீல் என்றும் அறியப்படும் இவர் உடல்நல குறைவால் மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து விட்டார். அவருக்கு அளித்த சிகிச்சை மற்றும் மரணம் அடைந்தது பற்றிய விவரங்களை அறிக்கையாக மருத்துவமனை பின்னர் வெளியிடும் என தகவல் தெரிவித்து உள்ளது.