புதுடெல்லி,
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்க மறுத்த பிரதம அலுவலகம், தேவைப்பட்டால் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அனைத்துக்கட்சிகள் குழு பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி மறுத்த பிரதமர் அலுவலகம், தேவைப்பட்டால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது.
இதற்கிடையே பினராய் விஜயன், ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்க விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநில முதல்வர் அலுவலக தகவலின்படி பிரதமரை சந்திக்க ஜூன் 16 மற்றும் 21-ம் தேதிகளில் நேரம் கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் அலுவலகம் அதனை நிராகரித்துள்ளது.
முன்னதாகவும் பிரதமர் அலுவலகம் கேரள மாநில அனைத்துக் கட்சி குழுக்களுக்கு அனுமதியை மறுத்தது.