தேசிய செய்திகள்

தொழிலதிபரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி

குறைந்த விலைக்கு மடிக்கணினிகள் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு:

போலீசில் புகார்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவர், மங்களூரு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் மடிக்கணினி மற்றும் அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஷைஷாலி நகரை சேர்ந்த மனோஜ் சவுராசியா என்பவர் என்னிடம் அறிமுகமானார். அவர், என்னிடம் குறைந்த விலையில் மடிக்கணினிகளை தருவதாக கூறினார். அதன்படி முதலில் அவரிடம் பணம் கொடுத்து 2 மடிக்கணினிகள் வாங்கினேன்.

ரூ.5 லட்சம் மோசடி

அதன்பிறகு சில நாட்கள் கழித்து மனோஜ் சவுராசியா மற்றும் அவரது உதவியாளர் சுரக்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டு 15 மடிக்கணினிகள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தேன். இதற்கு ரூ.5.73 லட்சம் கொடுத்தேன். ஆனால் நீண்டநாட்கள் ஆகியும் மடிக்கணினிகளை அனுப்பி வைக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அப்போது தான் மடிக்கணினிகளை குறைந்தவிலைக்கு தருவதாக கூறி பணம் மோசடி செய்ததை உணர்ந்தேன்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை ஏற்ற மங்களூரு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மனோஜ் சவுராசியா இதுபோன்று பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர், அவரது உதவியாளரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.