திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் சுகாதார மந்திரி கெ.கெ.சைலஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. நெகட்டிவ் விகிதம் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதற்கு இணையான எண்ணிக்கைக்கு பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் கொரோனாவின் தாக்குதல் அதிகரிப்பதை தடுக்க அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தவிர்க்க முடியாது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதற்கான பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் விரைவில் வழங்கப்படும். வெளிநாடுகளில் பரிசோதனைக்கு பின் மீண்டும் இங்கு பணம் செலவு செய்து கொரோனா பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, கேரளாவில் கொரோனா பரிசோதனை இலவசமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், கேரளாவில் இன்று முதல் வாகனம் மூலம் நடமாடும் கொரோனா பரிசோதனை கூடம் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. இந்த பரிசோதனைக்கான கட்டணம் ரூ.448 மட்டுமே. 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை வழங்காத பரிசோதனை கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.