பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் வருகிற 22-ந் தேதி முதல் மே மாதம் 18-ந் தேதி வரை பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு செல்ல வசதியாக மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்லும் போது அனுமதி சீட்டை கண்டக்டரிடம் காட்டி பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்வு முடிந்து வீடு திரும்பும் போது தேர்வு எழுதிய வினாத்தாளை கண்டக்டரிடம் காட்டி பயணிக்கலாம் என்றும் சாதாரண பஸ்கள் மட்டும் இன்றி எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் மாணவ-மாணவிகள் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் பஸ்சில் பயணம் செய்வது குறித்து அந்தந்த மாவட்ட போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றோலை அனுப்பியுள்ளது. அதே சுற்றோலையை ஆதாரமாக கொண்டு தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.