புதுடெல்லி,
டெல்லி மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, டெல்லி மாநகர போக்குவரத்து கழகத்துக்கு பஸ்கள் வாங்கியதில் நிகழ்ந்த முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அது குறித்து நாளை (இன்று) விவாதிக்கலாம் என கூறினார். ஆனால் இதை ஏற்காத பா.ஜனதாவினர் நேற்றே இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவையை 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் கூடிய போதும் இந்த அமளி தொடர்ந்ததால்,பா.ஜனதா எம்.எல்.ஏ.க் கள் 4 பேரை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதன்படி விஜேந்தர் குப்தா, மோகன் சிங் பிஸ்ட் உள்பட பா.ஜனதா எம்.எல்.ஏ.க் கள் 4 பேரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இதனால் டெல்லி சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.