விஜயவாடா,
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சிறப்பு நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.
இதை கண்டித்து இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் இடதுசாரிகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்த முழு அடைப்பு போராட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்தது.
இதற்கிடையே ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்காத விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று புயலை கிளப்பின. தெலுங்குதேசம், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவை காலையில் கூடிய போதும், ஆந்திராவை காப்பாற்றுங்கள், கூட்டணி தர்மத்தை பின்பற்றுங்கள் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக்கொண்டு ஆந்திர எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் சபை கூடிய போது பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார், பட்ஜெட் விவாதத்துக்கு நிதி மந்திரி பதிலளிக்கும் போது ஆந்திர எம்.பி.க்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பார் எனக்கூறியதுடன், எனவே அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் இதை ஏற்காத ஆந்திர எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறே இருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.