புதுடெல்லி,
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தமிழக அரசு சார்பிலும் எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எம்பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினை தமிழக அரசு நியமித்தது.
போர் நடைபெற்றுவரும் உக்ரைனில் இருந்து இதுவரை 777 தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் சிக்கியிருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை விரைந்து மீட்க இந்த குழு திட்டமிட்டுள்ளது.
இந்த சிறப்பு குழுவில் தமிழக எம்.பி க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா, எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். இவர்கள், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை மீட்டு வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தனர்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் தமிழக குழுவிற்கு மீட்புப்பணிக்கான அங்கீகாரம் அளிக்கும் பட்சத்தில், மாணவர்களை மீட்டு வருவதில் தமிழக குழுவிற்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எனவே, இதனை மேற்கோள் காட்டியே மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தனர்.