தேசிய செய்திகள்

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான வருங்காலம் இந்தியர்களுக்கானது: பின்லாந்து ஜனாதிபதி கணிப்பு

மக்கள் தொகையியல் ஆய்வு, பொருளாதாரம் மற்றும் வரலாறு உங்களுக்கு ஆதரவாக பேசும் என்றார்.

புனே

பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லிக்கு கடந்த 4-ந்தேதி வந்தடைந்த அவர், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியை 5-ந்தேதி நேரில் சந்தித்து பேசினார். இதன்பின்னர், பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், கூட்டாக நிருபர்கள் சந்திப்பை நடத்தினர்.

அதில், பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவும், பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு விவகாரத்திலும் ராணுவ மோதலால் தீர்வு காண கூடாது என நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் என பேசினார்.

இதன்பின்பு பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் பேசும்போது, உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவை புகழ்ந்து பேசினார். நாம் எல்லோரும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இந்தியராக வேண்டும் என அப்போது கூறினார். இந்தியாவின் வெளியுறவு கொள்கை அணுகுமுறையில் இருந்து உலக நாடுகள் கற்று கொள்ளலாம் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஒரு பொருளாதார அற்புதம் என்றும் ஸ்டப் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடியுடன் நேற்று நடந்த சந்திப்பை பற்றி குறிப்பிட்டார். அவரிடம் 3 மணிநேரம் பேசினேன். அது எனக்கு கிடைத்த கவுரவம் மற்றும் தனிப்பட்ட ஓர் உரிமையாக பார்க்கிறேன். அப்போது உலகம் முழுவதுமுள்ள மோதல்கள் பற்றி விரிவான அளவில் உரையாடினோம் என்றார்.

தொடர்ந்து அவர், இந்தியாவின் சமநிலையான வெளியுறவு கொள்கையானது, உலக நாடுகளிடையே மோதல்கள் ஏற்படும்போது, அனைத்து தரப்பினரிடமும் பேசும் திறன் பெற்ற நாடாக இந்தியா திகழ வழிவகை செய்கிறது.

ஒவ்வொருவரிடமும் மிக அழகாக பேச கூடிய அரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது கருத்துகள் அல்லது கொள்கைகள் அடிப்படையில் என்றில்லாமல், நடைமுறை சாத்தியத்துடன் கூடிய வெளியுறவு கொள்கையை கொண்டுள்ளது. அதனுடன், ஆழம் வாய்ந்த கூட்டணிகளை கொண்டிருக்கவில்லை. இதனால், திறந்த மனப்பான்மையுடன் இருக்க முடிகிறது என கூறியுள்ளார்.

அடுத்த தசாப்தத்திற்கான வருங்காலம் பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, அடுத்த பத்து ஆண்டுகளுக்கான வருங்காலம் இந்தியர்களின் கைகளிலுள்ளது என துணிச்சலான கணிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, வருங்காலம் இந்தியர்களுக்கானது என நான் நினைக்கறேன். நான் இந்தியாவில் இருப்பதாலோ அல்லது வெளிப்படையாக ராஜதந்திரத்துடன் பேச முயற்சிக்கவோ இதனை நான் கூறவில்லை. மக்கள் தொகையியல் ஆய்வு, பொருளாதாரம் மற்றும் வரலாறு உங்களுக்கு ஆதரவாக பேசும் என்றார்.

பிரதமர் மோடியுடனான 3 மணிநேர சந்திப்பு அற்புதம் என குறிப்பிட்ட அவர், அதன்பின்பு, ரெய்சினா பேச்சுவார்த்தையில் பேசினேன். அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினேன் என கூறினார்.

கடைசியாக நான் 2013-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தந்தேன். தற்போது நான் இந்தியாவில், வளர்ச்சியையே பார்க்கிறேன். உள்கட்டமைப்பு, சாலைகள் மற்றும் கட்டிடங்கள், என இந்தியாவுக்கு திரும்ப வருவது எப்போதும் நன்றாகவே உள்ளது என்று கூறினார்.