மைசூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா கிராமத்தை சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு திருமணமாகி மனைவி, 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அல்தாப் பாஷா, பிரியப்பட்டணா டவுன் ஜோனிகேரி தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை அல்தாப் பாஷாவின் 2-வது மகள் குல்பாம் தாஜ் (வயது 23), 4-வது மகள் சிம்ரன் தாஜ் (20) ஆகிய 2 பேரும் குளிப்பதற்காக குளியல் அறைக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் 2 பேரும் வெளியே வரவில்லை. மேலும் குளியல் அறையில் இருந்து கியாஸ் நெடி வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அல்தாப், குளியல் அறை கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் 2 பேரும் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அல்தாப், குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது குளியல் அறை முழுவதும் கியாஸ் கசிந்து நின்றதுடன் குல்பாமும், சிம்ரனும் மயங்கிய நிலையில் தரையில் கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அல்தாப், மகள்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அக்கா-தங்கை 2 பேரும் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அல்தாப் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிரியப்பட்டணா போலீசா மருத்துவமனைக்கும், அல்தாப்பின் வீட்டுக்கும் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குல்பாமும், சிம்ரனும் ஒன்றாக குளிக்க சென்றுள்ளனர். அப்போது, வெந்நீரில் குளிப்பதற்காக கீசரை (தண்ணீர் சூடேற்றும் எந்திரம்) ஆன் செய்துள்ளனர். அந்த சமயத்தில் கீசரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் குளியல் அறையில் ஜன்னல் எதுவும் இல்லாததால், கியாஸ் வெளியேறாமல் அங்கேயே சுற்றி உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரியப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.