பெங்களூர்
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). இவர் லங்கேஷ் என்ற வாரப்பத்திரிகையை நடத்தி வந்தார். முற்போக்கு கருத்துகளை எழுதி வந்த அவர், கடந்த 5ந் தேதி இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா உள்பட வெளிநாட்டு தூதரகங்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இந்த கொலையில் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என சந்தேகப்படும் இருவரின் உருவப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொலை சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று முதல் முறையாக நிருபர்களை சந்தித்தார் பி.கே.சிங். அப்போது குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் 3 வகையான வரைபடங்கள் வெளியிடப்பட்டன. குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக சிங் தெரிவித்தார்.
கொலையாளிகள் சம்பவ இடத்தில் ஒரு வாரமாக முகாமிட்டு கவுரி லங்கேஷை நோட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய பல்சர் பைக் மற்றும் அது சார்ந்த விஷயங்களை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டன.
கொலையாளிகளை கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியதன் அடிப்படையில் இரு ஓவியர்களை கொண்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டதாகவும், இரு ஓவியர்களுமே ஓரளவுக்கு ஒரே மாதிரியான படங்களை வெளியிட்டுள்ளதால் குற்றவாளிகள் இதைப்போலத்தான் இருப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளதாகவும், பொதுமக்கள், இவர்களை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சிங் கேட்டுக்கொண்டார்.